பிரதான சாலை (Highway)

பிரதான சாலை

“எனக்கு இந்த காலத்து பிள்ளைங்கள புரிஞ்சிக்கவே முடியல. கலியாணம் ஆயி குடும்பம் குட்டினு வந்துட்டா வேற உலகத்துக்கு போய்டுவாய்ங்க போல. அவன் வீட்ல வாழ்றேன்னா அவன் நம்மள என்ன வேணாலும் சொல்லுவானா என்ன? அவனுக்கு ரொம்ப எடம் கொடுத்துட்டேன். அதான் இப்படி பேசுறான். அவன சின்ன வயசுல நான் இந்த தோள்ல போட்டு வளர்த்ததெல்லாம் மறந்துட்டான். இல்லாட்டி இப்படியெல்லாம் பேசுவானா என்ன? எருமை மாடு.”

முணுமுணுத்துகொண்டே கோபமாக நடந்து கொண்டிருந்தார் தாத்தா. வழியோரமாக சைக்கிள் ஒன்று அவரை நோக்கி வந்து கொண்டிருந்தது.

“என்ன தாத்தா, ஏதோ உளறிக்கினே போறீங்க? வூட்ல சொல்ட்டு போறீங்களா?” என்றான் சைக்கிள் ஓட்டும் அசோக் லாவகமாக.

“ஆமாம் டா. ஒரேடிய போய்டபோறேன். உனக்கு என்ன வந்துச்சு. கால்வாய்-ல விழாம வீட்டுக்கு போய் சேரர வழியப்பாரு. கிறுக்கு பயலே.” என்றார் தாத்தா தீரமாக.

அசோக்-கும் மறுமொழி கூறாமல் ஓடிவிட்டான். தாத்தா கோபமாக இருந்தால் சாலமன் பாப்பையா வந்தாலும் பேசி ஜெயிக்க முடியாதே.

தாத்தா திரும்பி பார்த்துவிட்டு, மீண்டும் காய்கறி கடையை நோக்கி நடந்தார். இந்த பக்கத்து வீட்டு பொடியனெல்லம் ‘வூட்ல சொல்ட்டு போறீங்களா’-னு கேக்கறான். எல்லாருக்கும் எது இருக்கோ இல்லையோ, வாய்-ல திமிரு ஒரு கிலோ இருக்கு! வயசானவன்னு ஒரு மரியாதை கிடையாது. வாய்க்கு வந்தத பேசவேண்டியது, ‘பணிவா பேசணும் தம்பி’னு சொன்னா, ‘தமிழ்ல எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை பணிவு தான்’, அப்படின்னு பெனாத்தவேண்டியது.

கோபத்தில் குமுறிக்கொண்டே தாத்தாவும் வேகமாக நடந்தார். குரோம்பெட் பிரதான சாலையும் வந்துவிட்டது. அதை தாண்டினால் கடையில் வாங்கவெண்டியதை வாங்கலாம். ஆனால் இப்பொழுதோ ஒரு மீடியனை போட்டுவிட்டார்கள். சாலையில் தார் கூட தெரியாத அளவிற்கு வாகனங்கள் குவிந்து கிடந்தன. அதை தாண்டுவதற்கு இப்பொழுது ரோடு ஓரமாகவே அரை கிலோமீட்டர் தூரம் நடந்து தான் சிக்னலில் தாண்ட வேண்டும். தாத்தவிற்கோ கோபம் தணிந்தபாடில்லை. வாயினால் மூச்சு முட்டிக்கொண்டு அங்கேயே நின்று பார்த்துகொண்டிருந்தார்.

“ஒரு காலத்துல எவ்ளோ நல்லா இருந்துச்சு இந்த ஊரு. ரோட்டுக்கு அந்த பக்கத்துல வயல் இருந்துச்சு, பச்சை பசேல்னு இருக்கும். மாடுகளும் கண்ணுகுட்டிங்களும் தூங்கிட்டு இருக்கும். ட்ராக்டர்ல ஒரு சேவல் கூவிட்டு இருக்கும். அதுக்கு பக்கத்துல நாய் ஒண்ணு சுருண்டு தூங்கிட்டு இருக்கும். எல்லாமே அப்போலாம் நல்லா இருந்துச்சே. இது என்ன  பன்னிகுட்டிங்க ஓடி வர்ரது மாதிரி இருக்கு இந்த highway. எங்க பாத்தாலும் வண்டி, லாரி, கார், பைக்… சீச்சீ.”

சற்று யோசித்தார் “ஆனா இப்போ எல்லாமே மாறிடுச்சு. எல்லாருக்கும் அவசரம். எல்லார் முகத்துலையும் ஸ்டாம்ப் குத்தினமாதிரி ஒரு எரிச்சல் இருக்கும். வண்டி ஓட்டினா பைத்தியமே புடிச்சிடும். இதையெல்லாம் எங்க சொல்றது.” என்று தனக்கே மறுமொழி கூறிகொண்டார்.

பேசாம கண்ணன டிக்கெட் வாங்கி கொடுக்க சொல்லிட்டு ஊருக்கு போய்டபோறேன். மதுரை மாதிரி ஒரு ஊருல நிம்மதியா இருக்கலாம். எது மாறினாலும் மதுரை மட்டும் மாறாம அப்படியே இருக்கு. இந்த சென்னைக்கு வந்ததுலேர்ந்தே என் மனசும் உடலும் சரியா இல்ல. இந்த காய்கறிகள் வாங்கிட்டு மொதல்ல இதான் செய்யபோறேன்” என்று பரபரப்புடன் எண்ணினார்.

ஏதோ யோசித்துக்கொண்டு சடாலென்று அங்கேயே சாலையை கடந்தார். கிறீச் கிறீச் என்ற சத்தத்துடன் வண்டிகள் அவர் மீது மோதாமல் இருக்க ப்ரேக் அழுத்தினார்கள். நாலைந்து பேர் திட்டவும் திட்டினார்கள். தாத்தாவுக்கு வேலை தான் இப்பொழுது குறி. மீடியனை அடைந்தார். அதுவோ இடுப்பளவு வரை உயரமாக இருந்தது.

காய்கறி பையை மேலே வைத்துவிட்டு ஏறினார். ஒரு காலத்தில் ஹை ஜம்ப் வீரராக இருந்தவராச்சே தாத்தா. இதெல்லாம் என்ன, தூசி, என்பதைப்போல ஏறினார். முன்போல இல்லை அந்த உடம்பு. வியர்வை நெற்றியில் துளிர்த்தது. கை கால்கள் நடுங்கின. இதயத்தின் துடிப்பு சத்தம் காய்கறி கடை வரை கேட்டிருக்கும். மூச்சு வாங்கியது. தாத்தா சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு இறங்கினார். ஏதோ தூக்கம் இழுத்து கொண்டு வந்தது. “தூக்கமாத்தரை போட்டுகொண்டேனா என்ன?” என்று யோசிப்பதற்குள் சுற்றி படபடவென வெளிச்சங்கள் தென்பட்டன. வாகனம் ஹாரன் பிளிறிக்கொண்டு வருவது, கண்ணன் சண்டையிடுவது, குழந்தைகள் ஓடிவருவது, அந்த குழந்தைகள் கண்ணனாய் மாறுவது, குழந்தை கண்ணன் அவரை இழந்து அழுவது, “என்ன மன்னிச்சுகோங்க, அப்பா” என்று கண்ணில் நீர் பெருக்க அழுது மன்றாடுவதை போலெல்லாம் தோன்றியது.

சிலிர்த்தது கண்ணில் ஒரு சிறிய சொட்டு நீர், ஒரு காட்டாறு பெருக்கெடுத்து ஓடுவதைப்போல் கன்னத்தில் ஓடியது. லேசாக சிரித்தார். “கண்ணா, கனவிலும் நீ, என் கனவும் நீதானே.” புன்னகை ததும்பிய முகத்துடன் கண்ணயர்ந்தார்.

—–

“டாக்டர், அப்பாவுக்கு…”

“BP டௌன் ஆகிருக்கு. அதான் மயக்கம் போட்டுட்டார் அப்பா. எதுவும் கவலை படறதுக்கு இல்லை. இந்த தலை ல  காயத்துக்கு மட்டும் இந்த மருந்த குடுங்க. செரியாகிடும்.”

—–

“அப்பா, நீங்க கோச்சிண்டதால தாத்தா போய்டுவாரா பா?”

“இல்ல டா குட்டிப்பையா, தாத்தாவ இனிமேல் நா போகவே விடமாட்டேன், நீ வேணா பாரேன்.” என்றான் கண்ணன், கண்ணீர் நெஞ்சை அடைக்கும் குரலில். கண்ணன்  தன் மகனை அணைத்துகொள்வதை தாத்தா கவனிக்கவில்லை. அவர் கண்களை கண்ணீர் மறைத்துவிட்டது.

2 thoughts on “பிரதான சாலை (Highway)

Leave a comment